தஞ்சாவூர் வீணை ஸ்பெஷல்... பலா மரத்தை கோடாரியால் செதுக்கும் தொழிலாளர்களின் கதை இதுதான்.!

நாதஸ்வரம், தவில், வீணை, தம்பூரா, மிருதங்கம், வயலின் என இசை கருவிகள் மட்டுமல்லாமல் கலைத்தட்டு, நெட்டி, வேலைப்பாடு, ஐம்பொன் சிலை, மரச் சிற்பம்,தஞ்சாவூர் ஓவியம், குத்துவிளக்கு என பல்வேறு வகையான கலைப் பொருட்களின் பிறப்பிடமே தஞ்சை மாவட்டமாகும்

எத்தனையோ இடங்களில் இந்த கலைப் பொருட்கள் தயாராகினாலும் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை கலைநயம் மாறாமலும் கை வேலைப்பாடுகளுடன் தஞ்சை மாவட்டத்திலையே தயாராகி வருகின்றன. முக்கியமாக தனித்துவம் வாய்ந்த இக்கலைப்பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றதாகும்

அந்த வகையில் இசை உலகில் மனதை மயக்கும் கருவியாக திகழும் வீணைதஞ்சையில் மன்னர்கள் காலத்திலிருந்து இருந்து இன்று வரைபால் சத்து நிறைந்த பலா மரம் சங்கீதமாக உருவாகும் வரை கைவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு வருகிறது

மேலும் இது குறித்து தொழிலாளிகள் கூறுகையில் எங்க யூனியன்ல 40 பேர் வீணை செஞ்சிட்டு இருக்காங்க. வீணை உருவான காலத்திலிருந்தே இந்த இடத்தில் தான் பலா மரத்தை செதுக்கும் வேலைகள் நடந்து வருகிறது

நாங்கள் இங்க 6 பேர் வேலை செய்கிறோம். அவங்களுக்கு தேவையான வீணைக்கான மரத்தை கொடுப்பாங்க ஒரு நாளைக்கு ஒரு ஆள் இரண்டு அல்லது மூன்று வீணையின் வடிவத்தை உருவாக்குவோம்

வீணைகள் பலா மரத்தில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்த மரங்கள் பன்ருட்டியில் இருந்து வருகிறது. எங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். காலையில 9 மணிக்குள்ள வந்துருவோம் 2 மணிக்கெல்லாம் வேலையை முடிச்சிட்டு போவோம்

மாசத்தில் எல்லா நாளைக்கும் வேலை இருக்கும். தஞ்சை பெரிய கோயில் பக்கத்துலையே இந்த வேலைகள் நடப்பதால் அங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு தயாராகும் வீணைகளை ஆர்வமாக பாப்பாங்க. தயாராகும் விதத்தை பற்றியும் கேப்பாங்க

எத்தனையோ இடங்களில் வீணைகள் தயாராகினாலும் நம்ம தஞ்சாவூர் வீணைக்கே தனி சிறப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் இங்கு தயாரிக்கப்படும் வீணைகள் முழுக்க முழுக்க கைகளாலையே உருவாக்கப்படுகிறது

எங்களுடைய வேலை இங்கு வரும் பலா மரத்தில் வீணையின் முதற்கட்ட வடிவத்தை உருவாக்குவதுதான்.  அடுத்தடுத்த வேலைப்பாடுகள் தஞ்சை நகரில் பலரால் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்