தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து பொங்கலிட்டு சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரியம் கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது
அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை களத்திற்கு தயார் படுத்தும் பணிகளில் நாமக்கல் அருகே சாலப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 11 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்ததுடன் அவற்றிற்கு பெயரிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்து வருகிறார்
ஜல்லிக்கட்டுக்கு தேவைப்படும் காளைகளை புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சேலம் ,காங்கேயம் போன்ற ஊர்களில் இருந்து மாடுகளை வாங்கி அதற்கான முழு பயிற்சிகளையும் ராஜா அளித்து வருகிறார்
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முக்கியமாக மண் குத்தும் பயிற்சி முதற்கட்டமாக அளிக்கப்படுகிறது
மாடுகளுக்கு மண்குத்தும் பயிற்சி ஏன் கட்டாயமாக அளிக்கப்படுகிறது என்றால் வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளையை அடக்க வரும் வீரர்கள் எளிதில் அடக்கி விடக்கூடாது என்பதற்காக மணல்மேடுகளில் காளைகளை விட்டு மாடுகளின் கொம்புகளால் மண்ணை குத்தி தூக்குவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது
இதனால் அவ்வளவு எளிதில் காளை மாடுகள் மாடுபிடி வீரர்களிடம் மாட்டாது என்பதற்காக இணை பயிற்சி அளிக்கப்படுகிறது
காளைகளுக்கு உடல் வலிமைக்காக வழக்கமாக உணவை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருள்களை வழங்குகின்றனர்
காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, பயிற்சி வடம் , நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர்
மேலும் உடற்பயிற்சி போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது என்றே கூறலாம்
களத்திற்கு காளைகளும், களத்தில் சந்திக்க காளையர்களும் தயாராகி வரும் ஜல்லிக்கட்டுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்