தமிழர்களின் முக்கிய பண்டிகையும் விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் பண்டிகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை, நெருங்கி வருவதை ஒட்டி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளன
தஞ்சை மாவட்டத்தை பொருத்த வரையில் பொங்கல் கரும்பை சில்லறை விற்பனைக்கு விவசாயிகள் சில இடங்களில் அறுவடை செய்து வருகின்றனர்
மேலும் அடுத்த வாரம் முதல் கரும்பு அறுவடை பணிகள் முழுமையாகதொடங்க உள்ள நிலையில் பானை, நாட்டு வெல்லம் சுடச்சுட தயாராகி வருகிறது
பொங்கல் பண்டிகைக்கு தேவையான முக்கிய பொருட்களில் ஒன்றான மஞ்சள் கொத்து திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மஞ்சள் கொத்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது
இந்த நிலையில் ஒரத்தநாட்டை அடுத்த பாச்சூர் கிராமத்தில் கல்லூரி படித்து வரும் இளைஞர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டு சுமார் அரை நிலத்தில் மஞ்சள் கொத்தையும் பயிரிட்டுள்ளார்
பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறுவடை செய்ய உள்ளதாக கூறும் நிலையில் மஞ்சள் கொத்து சாகுபடி பற்றி பல தகவல்கள் பகிரிந்துள்ளார். மேலும் இது குறித்து கல்லூரி மாணவன் அபினேஷ் கூறுகையில் ’நான் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் படித்து வருகிறேன்
எனது கல்லூரி நேரம் 12 மணியிலிருந்து 1 மணி தான். வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்து அப்பாவோடு சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு அப்பாவிற்கு உறுதுணையாகவும், விவசாயம் பற்றி பல விஷயங்களை கற்றுக் கொண்டும் வருகிறேன்
எங்களிடம் சுமார் ஒன்றரை ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இதில் தோட்டப்பயிர் மற்றும் கடலை சாகுபடியை செய்து வருகிறோம்
நிலப்பகுதியின் ஓரத்தில் நிழலாக இருக்கும் இடத்தில் ஆடி மாதத்தில் மஞ்சள் சாகுபடியை தொடங்கினோம். ஆறு மாத பயிரான மஞ்சள் சாகுபடி நிழல் பகுதியில் மட்டுமே செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அதன் வளர்ச்சிஅதிகமாக இருக்கும்
நாங்கள் இருக்கும் பகுதியில் இந்த ஆண்டு பெரிதளவில் மழை இல்லை. மழைக்காலத்திலும் வெயில் அடித்ததால் சில மஞ்சள் கொத்துகள் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றன. எங்கள் வீட்டிற்கு பின்புறம், வயல்வெளிகள் என அரை நிலத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளோம்
தற்போது பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறுவடை செய்ய உள்ளோம். மஞ்சள் சாகுபடியை பொருத்தவரையில் வீணாவதற்கு வாய்ப்பு இல்லை. அனைத்து மஞ்சல் கொத்துகளும் விற்பனை ஆகிவிடும். மீதம் இருந்தால் அதனை அடுத்த சாகுபடிக்கான விதையாக பயன்படுத்திக் கொள்வோம்
கிராமப் பகுதியில் மட்டும் தான் மஞ்சள் சாகுபடி செய்ய வேண்டும் என்பதல்ல. நகரப் பகுதியில் இருப்பவர்களும் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு மஞ்சள் கொத்துகளை சாகுபடி செய்யலாம்
இவ்வாறு நீங்களே இதனை சாகுபடி செய்யும் போது பொங்கல் நேரத்தில் வரும் செலவை இதிலிருந்து ஈடுகட்ட முடியும். மஞ்சள் சாகுபடிக்கு நிழல் எந்த அளவிற்கு அவசியமோ
அதே அளவிற்கு நீரும், உரமும் அவசியம் வீட்டிற்கு பின்புறம் செய்யும் போது கழிவுநீர் அதில் சேர்ந்தாலும் இயற்கை உரங்கள் தயாரித்துபயன்படுத்த வேண்டும்
மாட்டு சானம், காய்கறி கழிவுகள் சாம்பல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உரங்களை நிலத்தில் பரப்பிவிட்டு அதன் மேல் மஞ்சளை பயிரிட்டு தேவையான நேரத்தில் இயற்கை உரங்களை தெளிப்பதன் மூலம் பயிர் நல்ல வளர்ச்சி அடையும் என்று மாணவன் கூறினார்