தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரும் தனக்கென தனிச்சிறப்பை கொண்டு விளங்கும் நிலையில், பெயரிலேயே “விருது” என்ற சிறப்பை கொண்டு தனித்துவமாக தெரிகிறது விருதுநகர்
பண்டைய காலத்தில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விருதுநகர் இருந்த போது விருதுவெட்டி என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது
இந்த விருதுவெட்டி என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு செவிவழி கதைகளே சொல்லப்படுகிறது. இக்கதைப்படி முந்தைய காலத்தில் பல போர்களில் வெற்றி பெற்று பல விருதுகளைப் பெற்ற ஒருவன்
இவ்வூருக்கு வந்து என்னை வெல்ல யாரேனும் இங்கு இருக்கிறீர்களா.? என இவ்வூர் மக்களை பார்த்து கேட்க, இவ்வூரை சேர்ந்த ஒருவர் அந்த வீரனை வென்று விருதுகளை பெற்றதால் இவ்வூர் விருதுவெட்டி என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது
விருதுவெட்டி என்ற பெயரே 1875ம் ஆண்டுக்கு பின்னர் விருதுபட்டி என்று அழைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாக விருதுபட்டி இருந்த போது, விருதுபட்டி என்ற பெயரை விருதுநகர் என மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது
06.04.1923 ம் ஆண்டு இதற்காக ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு அப்போதைய ஆளுநரின் ஆட்சிக்குழு உறுப்பினர் சர்.பி.எஸ்.சிவசாமி ஐயர் மக்கள் கோரிக்கையை ஏற்று அரசுக்கு பரிந்துரை செய்தார்
இதனை தொடர்ந்து அன்றைய முதல்வர் பனகல் ராஜா 29.10.1923 ம் நாள் விருதுபட்டி என்ற பெயரை விருதுநகர் என மாற்றி அறிவித்தார். கடந்த 2023 ம் ஆண்டோடு விருதுநகர் பெயர் மாற்றம் கண்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது
1997 ம் ஆண்டு வரை காமராஜர் மாவட்ட தலைநகராக இருந்த விருதுநகர், விருதுநகர் மாவட்டம் என பெயர் பெற்று பெருமையோடு விளங்குகிறது