புதுக்கோட்டையில் இருந்து 19 கிமீ தொலைவில் உள்ளது திருமயம் மலைக்கோட்டை. இந்த மலைக்கோட்டையில் தான் உள்ளது குகைகளுக்கு நடுவே அமைந்துள்ள பழைமையான சிவன் கோவில், பீரங்கி மலை, எண்கோண குளம், மற்றும் அழகிய கோட்டை ஆகியவை இருக்கிறது
திருமயம் கோட்டை ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் காலத்தில் 1676-ம் ஆண்டு கட்டப்பட்டது. 40 ஏக்கர் பரப்பளவில் கோட்டை பரந்து விரிந்து காணப்படுகிறது. கோட்டையின் உச்சியில் இருந்து பார்த்தால் மொத்த ஊரும் தெரியும் வகையில் அமைந்துள்ளது
எதிரி நாட்டு படையிடமிருந்து மன்னரையும் அவரது குடும்பத்தையும் காப்பதற்காகவே ஏழு மதில் சுவர்கள் எழுப்பப்பட்டது என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
கோட்டையின் உச்சியில் இருக்கும் மேடையில் ஒரு பீரங்கி உள்ளது. அது தற்போது வரை துரு பிடிக்காமல் கம்பீரமாக நிற்கிறது. இந்த பீரங்கி 20 அடி உயரமுள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளது
கோட்டை அருகில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் எண் கோண குளம் ஒன்று உள்ளது. தாமரை மலர் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த குளத்திற்கு எட்டு படி துறைகள் இருப்பதால் இது எண் கோண குளம் என்று அழைக்கப்படுகிறது
இந்த தீர்த்த குளத்தில் உள்ள தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்
கோட்டையை சுற்றி ஆழமான அதே சமயம் ஒரு காலத்தில் ஆபத்து நிறைந்ததாக இருந்த அகழிகள் கோட்டையின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அதற்கான மிச்சங்கள் மட்டுமே தடயங்களாக காணப்படுகின்றன
அதனைத் தொடர்ந்து கோட்டையின் உள்ளே மலைகளுக்கு இடையே உள்ள பாறையில் சிவனுக்காக குடைந்து கட்டப்பட்டுள்ள குகைக் கோயில் ஒன்று உள்ளது. 30 அடி உயரத்தில் மேல் பாறைக்குள் சதுர வடிவில் சிவ லிங்கமும் அமைந்துள்ளது
சிவ லிங்கத்தை தரிசிக்க செல்ல இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. எட்டாத உயரத்தில் இருக்கும் இந்த சிவலிங்கத்தை அக்காலத்து மக்கள் எவ்வாறு தரிசனம் செய்தனர் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் அனைவராலும் ஆச்சரியமாக பார்க்க வைக்கிறது இந்த சிவலிங்க தரிசனம்