புதுக்கோட்டை மாவட்டமானது மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்து இன்றளவும் பாரம்பரிய பெருமையை நிலைநாட்டி வருகிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் சோழர் காலத்து பல்லவர் காலத்து கோவில்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், சுற்றுலா தலங்கள், குடைவரை கோயில்கள் ஆகியவை பெரும் சிறப்பு பெற்றதாகும்
அதில் விராலிமலை முருகன் கோவில் (மயில்கள் சரணாலயம்), கொடும்பாளூர் மூவர் கோவில், சித்தன்னவாசல் ஆகிய சுற்றுலா தலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் விராலிமலை திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 40 கிலோமீட்டர்தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது
இந்த கோயிலின் மூலக் கோயிலை அழகிய மணவாளன் என்னும் மன்னர் அமைத்தார் என இங்கு உள்ள திருப்பணி கல்வெட்டு பாடல் ஒன்று தெரிவிக்கிறது. இக்கோவிலின் சுற்றுச்சூழல் கொடும்பாளூர் கோவிலை ஒத்து அமையப்பெற்றுள்ளதால் சோழர்கால கோயிலாக இருக்கலாம் என அறியப்படுகிறது
ஆதித்த சோழன் என்பவன் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ததாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகிறது. பின்னர் புதுக்கோட்டை மன்னர்களால் மணிமண்டமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது
இந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலானது மலை மேல் அழகுற அமைந்துள்ளது. மேலும் இங்கு வந்தால் பல்வேறு வகையான மயில்களையும் காண முடியும்
இயற்கை சூழல், அழகிய மயில்கள், முருகன் தரிசனம் என மனதுக்கு நிறைவான சுற்றுலா தலம் (கோவில்) என இந்த விராலிமலை முருகன் கோவிலை சொல்லலாம்
விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆகும். உள்ளே செல்ல கட்டணங்கள் எதுவும் இல்லை
புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சித்தன்னவாசல்
இந்திய ஓவியக்கலை வரலாற்றில் அஜந்தா ஓவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஓவியங்கள் சித்தன்னவாசலில் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கிராமிய தமிழ் எழுத்துக்கள் இங்குள்ள சமண படுக்கையில் காணப்படுகிறது
இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவில் மூலிகைகளினால் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகிறது. தமிழர்களின் கலை பண்பாட்டினை பறைசாற்றும் உயிரோட்டம் உள்ள ஓவியங்களாக இவை திகழ்கின்றன
ஓர் அழகிய குளத்தில் தாமரை மலர்கள், அல்லி மலர்கள், மீன்கள் நீந்துவது போலவும் , யானைகள் தண்ணீர் குடிப்பது போலவும் கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் ஓவியங்கள் தத்ரூபமாக அமையப்பெற்றுள்ளது. சித்தன்னவாசல் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியதாக கருதப்படுகிறது
சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக இங்கு சிறுவர் பூங்காவும் இசை நீரூற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது.முத்தமிழ் பூங்காவில் புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த கலை மற்றும் இலக்கிய செய்திகள் அடங்கிய சிறு சிறு கற் சிலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள குகை ஓவியங்கள் மற்றும் சமணப் படுக்கைகள் ஆகியவற்றினை காண இந்தியர் ஒருவருக்கு 5 ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 100 ரூபாயும் நுழைவு கட்டணம் ஆகும். பூங்காக்களின் பொலிவும் சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலையின் பிரமிப்பும் பார்ப்பவர்களை பரவசமூட்டும் வகையில் இந்த சுற்றுலாத்தளம் அமைந்துள்ளது
கொடும்பாளூர் புதுக்கோட்டையில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குசோழர் காலத்தில் கட்டப்பட்ட மூவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது திராவிட கலைக்கு முன்னோடியாகவும் சோழர் கால கட்டிட கலைக்கு முதன்மையாகவும் விளங்குகிறது
அழகிய பசுமை சூழ்ந்த பூங்காவுடன் கோவில் அமைந்துள்ளது. மூவர் கோவிலில் இரண்டு மண்டபங்கள் மட்டுமே தற்போது உள்ளது. இந்த கோவில் அனைத்து நேரங்களிலும் திறந்திருக்கும். நுழைவு கட்டணம் 20 ரூபாய் ஆகும்