நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புராண கால சிறப்பு கொண்டதாகும்
கொங்கண சித்தர் மலை சாரலில் அமைந்துள்ள அத்தனூர் அம்மன் கோவிலில் மன்னர்கள் வழிபட்டதாகவும் இதனால் கோவிலுக்கு சுகவனம் என்ற பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது
சேலம் டூ நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அத்தனூர் அம்மன் கோவில்
காங்கேயம் பகுதியில் இருந்து குடிபெயர்ந்த கொங்கு வேளாளர் சமூகத்தை சார்ந்த மக்கள் தங்களுடன் காவலாக அம்மனை அழைத்து வந்து இங்கே குடியமர்த்தி கொண்டு அன்னையை தங்களுக்கு காவலாக இங்கேயே பிரதிஷ்ட்டை செய்து வணங்கி வருவதாகவும் கூறுகின்றனர்
இதிலிருந்து இந்த திருக்கோவிலின் தன்மையினை அறிய முடிகிறது. பழையோள் என்று சொல்லப்படுகின்ற கொற்றவையே இந்த அத்தனூர் அம்மன் என்று சொல்லப்படுகிறது
பல நூறு ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் தம் மன்னன் வெற்றி பெற வேண்டும் என்று தங்களை தாங்களே பலியிட்டு கொள்ளும் நவகண்டம் சிற்பமானாது அன்னைக்கு நேர் எதிரே வெளிப்புறத்தில் உள்ளது
இந்த கோவிலுக்கு வெளியே பல நூறு ஆண்டுகளாக உள்ள முதிர்ந்த ஆலமரங்கள். உள்ளே நுழைந்தால் காவலுக்கு அய்யனார். அன்னைக்கு எதிரே பெரிய குதிரை சிற்பங்கள்
மேலும் கணபதி சன்னதி, நாக கன்னிகள் சன்னதிகளும் இங்கு உள்ளன. உள்ளே கருவறைக்கு முன் தூவார சக்திகள் நின்றபடி காவல் புரிகின்றனர்
கருவறையில் வடக்கு முகம் நோக்கி எட்டு திருக்கரத்துடன் அமர்ந்து அசரனை காலால் மிதித்து வதம் செய்யும் கோலத்தில் தெற்று பற்களுடன் அருள்புரிகிறாள் இந்த அத்தனூர் அம்மன்