முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு
காலமறியா காலத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ மன்னன், இங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது
இதனால் பதறிய சோழன் வயலைத் தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தான். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று கூறப்படுகிறது
இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார்
இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. இங்கே வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி என்பர்
வயலூர் முருகப்பெருமான் என்று உலகெங்கும் பிரசித்தமான இந்த ஆலயத்தில் தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் முருகப்பெருமான் இணைந்து ஈசனை இங்கு பூஜிக்கிறார்கள் என்பது ஐதீகம். தனி சந்நிதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் வயலூர் முருகப்பெருமான்
திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை என்றும் இக்கோயிலின் ஓதவார் கார்த்திக்கேயன் தெரிவித்தார்