நாமக்கல் நகருக்கு அழகு சேர்க்கும் இந்த நாமகிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது தமிழகத்தின் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் நாமக்கல் மாவட்டத்தின் மற்றுமொரு பெருமைக்குரிய அடையாளச்சின்னம்
நாமக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குடைவரை நரசிம்மர் கோவிலுக்கு நேர் எதிரில் இந்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. நரசிம்மர் கோவிலின் கருவறைக்கு மேலே கோபுரம் இல்லாத நிலையில் தனக்கும் கோபுரம் வேண்டாம் என ஆஞ்சநேயர் கூறியதாக புராண கதைகளில் கூறப்படுகிறது
அதனால் இந்த கோவிலில் கோபுரம் இல்லாமல், திறந்தவெளியில், நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் நேர் எதிரே உள்ள நரசிம்மரை வணங்கிய நிலையில் இருப்பதை காண முடிகிறது. இக்கோவிலில் 18 அடியில் பிரமாண்டமான உயரத்துடன் முத்தங்கி திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்
வைஷ்ண தலங்களில், விநாயகருக்கு சந்நிதி இருப்பது அரிது. ஆனால் நாமக்கல் அனுமன் கோயிலில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இந்த விநாயக பெருமானுக்கு மாதந்தோறும் சதூர்த்தியிலும், சங்கடஹர சதுர்த்தியன்றும், விநாயக சதூர்த்தி நாளன்றும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வருடத்தில், கார்த்திகை , மார்கழி , தை ஆகிய மாதங்களில் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடத்தப்படுகிறது. பிரமாண்டமான காட்சி தரும் அனுமனை, வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்
மார்கழி மாதத்தில் வருகிற மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி திருநாளாக அனைத்து வைஷ்ணவ ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. அதுவும் நாமக்கல்லில் உள்ள இந்த திருத்தலத்தில் உள்ள அனுமனுக்கு,
ஜெயந்தித் திருநாளின் போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் வடைகளைக் கொண்டு, பிரமாண்டமான வடை மாலை சாத்தப்படுகிறது. இந்த நாளில் அனுமனைத் தரிசிப்பதற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் நாமக்கல்லுக்கு வருகின்றனர்
அனுமனுக்கு பிரமாண்டமான துளசி மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. அதேபோல, வெற்றிலை மாலைகளும் அணிவிக்கப்படுகின்றன. அனுமனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இந்த துளசியும் வெற்றிலையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றும் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன
இதையொட்டி நாமக்கல், சேலம், ஈரோடு, குமாரபாளையம், கரூர் முதலான சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்