திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் பாதையில் 20 கி.மீ தொலைவில் மண்ணச்சநல்லூர் அருகில் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.
தலப்புராணத்தின் படி சிபி மன்னன் காலத்தில் திருமாலோடு 3,700 வைஷ்ணவ பெரியோர்கள் வாழ்ந்த தலமிது. திருமாலின் பக்தனான சிபி மன்னன் இங்கு வந்திருந்தபோது அவனுக்கு வராஹ மூர்த்தி ரூபத்தில் அருட்காட்சி தந்து ஆட்கொண்டார்.
அப்போது மார்க்கண்டேய மகரிஷியின் ஆணைப்படி இங்கு திருமாலுக்கு பிரமாண்ட ஆலயம் எழுப்பி வழிபட்டான் சிபி. திருமகள் தவமிருந்து பெருமாளை அடைந்த தலமாகவும் சொல்லப்படுகிறது.
இங்குள்ள பெருமாள் ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் எனப்படுகிறார். ஆம், அழகிய தாமரைக் கண்களைக் கொண்டவர் இவர். கருவறையில் நின்ற திருக்கோலத்தில், கிழக்குத் திருமுக மண்டலமாக காட்சி தருகிறார்.
பெருமாளுக்கு அருகே சூரிய, சந்திரர் சாமரம் வீச, கருடனும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்தில் பெருமாளை வணங்கிக் கொண்டிருக்கின்றனர். பெருமாளின் திருவடியில் மாா்க்கண்டேயா் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளார்.
திருவெள்ளறை தலத் தீர்த்தமான பூங்கிணற்றில் திருமகள் பங்கஜவல்லி தவமிருந்த வேளையில் திருமால் ஆலிலை துயின்ற ஆதிபிரான் கோலத்தில் காட்சி அளித்து திருமகளுக்கு அருள் செய்தார். எனவே ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கிருஷ்ணனின் அம்சமானவர் என்றும் கூறப்படுகிறது.
பங்கயச் செல்வி, பரிமளதேவி, செண்பகவல்லி என்றெல்லாம் போற்றப்படும் தாயாருக்கே இங்கு எல்லா முதல் மரியாதையும் உண்டு. பெருமாள் வழங்கிய வரத்தின்படி இன்றும் எல்லா உற்சவத்திலும் தாயாரே முன்னே செல்வார். திருமால் அவரைப் பின்தொடர்ந்து செல்வார்.
இத்தலத்து பெருமாளை பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் 24 பாசுரங்களில் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள். வைணவ ஆச்சாரியரான ஸ்ரீராமாநுஜரின் சீடரான எங்களாழ்வாா் பிறந்த தலமும் திருவெள்ளறையே.
ராமானுஜர் இங்கு வந்தபோது தாயாருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை ராமானுஜருக்கு அளித்து பசி போக்கினாராம். அதனால் இன்றும் தாயாருக்கு அமுது செய்யப்பட்ட பிரசாதமே ராமானுஜருக்கு படைக்கப்படுகிறது.
ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த ஆலயத்தில் பல்லவமன்னன் தந்திவா்மன் காலத்து (805-ம் ஆண்டு) கல்வெட்டு தொடங்கி விஜயநகர அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் வரை இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கூறுகின்றன
வரலாற்றுப் பெருமைகளும் புராண மகிமைகளை கொண்ட இந்த திருவெள்ளரைத் திருத்தலம் திருமகளின் பரிபூரண கடாட்சத்தைக் கொண்டுள்ளது. அதேபோல் கருணைக் கடலான செந்தாமரைக் கண்ணனாம் புண்டரீகாட்சப் பெருமானின் அருளையும் கொண்டுள்ளது.