திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது
ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.
இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த கோயில் நான்கு யுகங்களை கடந்தது எனப் புரணப்படி நம்பப்பட்டாலும், குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறுகிறது.
கோயிலை தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது.
கோவில் கற்களை பிரித்து, பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது.
இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது.
மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன.
மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
கோயில் தல மரமங்களாக வில்வமரம், மாமரம் உள்ளன. ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்படுகிறது.
உடலில் வரும் மருகு மறைய உப்பு, மிளகு வைத்து வழிபாட்டால் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சிவனை வழிபாடு செய்யும் போது உப்பு, மிளகு வைத்து பலரும் வழிபடுகின்றனர்.
வேண்டிய வரத்தை வாரிக்கொடுப்பதால், வாரி வழங்கும் வள்ளல் என பக்தர்களால் சுக்ரீஸ்வரர் போற்றப்படுகிறார்.