திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக 951 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணி 2019 ஆம் ஆண்டு தொடங்கியது
பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் ஜனவரி 2 அன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக இருப்பது திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தான்
பல்வேறு நாடுகளுக்குத் திருச்சியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிண்டோ, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மூலம் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த முனையம் 60 ஆயிரத்து 723 ச.மீ பரப்பளவில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், 75 கோடி ரூபாய் செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறையும் கட்டப்பட்டுள்ளது
இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பன்னாட்டு பயணிகளையும், 1500 உள்நாட்டுப் பயணிகளையும் கையாள்வதற்கு ஏதுவாக குடியேற்றப் பிரிவினருக்கான 40 செக் அவுட் மற்றும் 48 செக் இன் கவுண்டர்களுடன்,
விமானங்களை நிறுத்த 10 ஏப்ரான்கள் மற்றும் ஏரோ பிரிட்ஜ், 26 இடங்களில் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது
அதே போல சுங்கத் துறையினருக்கென 3 சோதனை மையங்கள் மற்றும் 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன
இது தவிர, 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகளும் உள்ளன. ஒரே நேரத்தில் 1000 கார்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது
திருச்சியின் அடையாளமாக இருக்கும் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் மாதிரியானது புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது