வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள விராலிப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை கருப்பு சுவாமி கோவில்.
இந்த கோவிலில் மது அருந்தும் நபர்கள் ஒரு முறை வந்து சாமியிடம் மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்து கோவில் பூசாரியிடம் கயிறு கட்டி சென்றால் அத்துடன் மது அருந்துவதை விட்டுவிடுவார்களாம்
இதனால் குடும்ப பெண்கள் தங்களது வீட்டில் உள்ள ஆண்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையின் போது இந்த கோவிலுக்கு அழைத்து வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது
இக்கோவிலில் மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்து கயிறு கட்டிய பிறகு, மது அருந்தினால் அவர்களது வாழ்க்கையில் கோட்டை கருப்புசாமி பல்வேறு இன்னல்களை சந்திக்க வைக்கும் என்பது ஐதீகம்
இந்த கோவிலில் முக்கியமான திருவிழா என்றால் ஆடி மாதம் அமாவாசை முடிந்த முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் திருவிழா தான் என கூறுகின்றனர்
ஆடி மாதம் துவங்கும்போதே இக்கோவிலில் வேண்டுதல்கள் வைத்த பக்தர்கள் ஆட்டு கிடா பலி கொடுப்பதற்காக ஆட்டுக்குட்டிகளை கோட்டை கருப்புசாமி கோவிலில் வந்து விட்டு விடுவார்கள்
ஏனென்றால் ஆடி மாத திருவிழாவில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் பலி கொடுத்து படையல் போடுவது வழக்கம்
இதிலும் தனித்துவமான அம்சம் என்னவென்றால் இந்த ஆடி மாச திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று கிடா பலியிட்டு படையல் இட்டு உண்பார்கள்
படையல் என்றால் அரிசி சோறு, குழம்பு, என்று இல்லாமல், இந்த கோவிலில் ஆட்டுக்கறியை மட்டுமே படையலாக போட்டு உண்பார்கள்
மேலும் இந்த ஆடி மாத திருவிழாவில் பங்கேற்கும் 5000க்கும் மேற்பட்ட ஆண்களில் ஒருவர் கூட மது குடித்துவிட்டு கோவிலுக்கு வர மாட்டார்கள் என்று கூறுகின்றனர்
இப்படிப்பட்ட திருவிழாவில் தப்பித்தவறி எவரேனும் ஒருவர் மது அருந்திவிட்டு கோவில் எல்லைக்குள் வந்து விட்டால் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்றும்,
கை, கால் என உடலில் உள்ள ஏதாவது ஒரு பாகங்களை சேதம் ஆக்கிக் கொண்டு செல்வார்கள் என்றும் ஐதீகம் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த கோவிலில் எத்தனை ஆடுகளை காவு கொடுத்தாலும் இத்தனை ஆடுகளும் இக்கோவிலிலேயே வைத்து சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என்பது ஐதீகம்
ஒரு சிறிய அளவிலான கறித்துண்டு கூட இந்த கோட்டை கருப்பசாமி கோவில் எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது என்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது