தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது
மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இப்படியாக பெரிய பெரிய நினைவு சின்னங்கள் தமிழ்நாடு முழுவதும் உண்டு
அந்த வகையில் திருச்சி புத்தூர் ஈவேரா சாலையில் காந்தி அஸ்தி மண்டபம் 1949ல் சேவா சங்கம் சார்பில் அமைக்கப்பட்டு 1950 ஆம் ஆண்டில் பெயரிடப்பட்டது. மேலும் காந்தி மூன்று முறை திருச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது
காந்தியின் அஸ்தியை சேவா சங்கத்தினர் காவிரி கரையில் கரைப்பதற்கு கொண்டு வந்த பொழுது பாதி அஸ்தியை எம் மண்டபத்தில் அவர் நினைவாக வைத்ததாகவும் சொல்லப்படுகிறது
சலசலப்பான சாலையில் அமைதி பூங்காவாக இருக்கும் காந்தி அஸ்தி மண்டபமானது திருச்சி மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது
அது மட்டும் இல்லாமல் இங்கு மரங்களும் செடிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு விழும் இலைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட அருகில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் தயாரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது
அவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரோட்டோர பூச்செடிகளுக்கு உரமாக போடப்படுகிறது