இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது
இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 15 முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் போஸ்டல் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன
இதில் அஞ்சல் துறையின் பல்வேறு திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் கீழ் இயங்கும் 11 கோட்டங்களில் உள்ள அஞ்சல் துறை ஊழியர்களால் உருவாக்கப்பட்ட இந்த போஸ்டல் கொலு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
இது குறித்து மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி கூறுகையில், “இந்த போஸ்டல் கொலுவில் அஞ்சல் துறையின் பல்வேறு திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவற்றை வந்து கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
அஞ்சல் துறையை பொறுத்தவரையில் நம் பொதுமக்களுக்கு இருக்கும் மேலோட்டமான கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக இந்த போஸ்டல் கொலு வைக்கப்பட்டுள்ளது
பொதுவாக அஞ்சல் என்றாலே கடிதம் எழுதுவது, அஞ்சல் அலுவலகம், சிவப்பு நிற பெட்டி இவை மட்டுமே நம் கண் முன் வரும். ஆனால் அதையும் தாண்டி பலவகையான திட்டங்கள் அஞ்சல் துறையில் உள்ளது
அவற்றை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த போஸ்டல் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரி மாணவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் என அனைவரும் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போஸ்டல் கொலுவை பார்ப்பதற்கு வரலாம். இந்த நவராத்திரியை முன்னிட்டு அக்டோபர் 24ஆம் தேதி வரை இந்த போஸ்டல் கொலு இங்கு இருக்கும் அனைவரும் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்