தற்போது பொங்கல் பண்டிகை நாட்களை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், பொதுவாக பொங்கல் பண்டிகை என்றாலே அங்கு முக்கிய இடம் பிடிப்பது கரும்பு தான்.
அப்படி பட்ட கரும்பு எங்கோ வெளியூரில் இருந்து இங்கு வருகிறது என்று நினைத்திருப்போம். ஆனால் விருதுநகர் மாவட்டத்திற்கு தேவையான கரும்புகள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தான் பெரும்பாலும் வருகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் புலியூரான் கிராமத்தில் தான் கரும்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
புலியூரான் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் காலம் காலமாக பொங்கலுக்கு கரும்பு சாகுபடி செய்து வரும் நிலையில் கரும்பு அறுவடையின் போது வித்தியாசமான பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறை கரும்பு அறுவடையின் போது முதல் மூன்று கரும்புகளை மட்டும் அறுக்காமல் விட்டு மற்ற கரும்புகளை மட்டும் அறுப்பர்.விடப்பட்ட அந்த கரும்புகள் பொங்கல் முடிந்த பின்னரும் சில நாட்கள் அப்படியே இருக்குமாம்.
இது தொடர்பாக பேசிய புலியூரான் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெத்த பெருமாள் ஒவ்வொரு முறையும் கரும்பு அறுக்கும் போது விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் வராமல் தடுத்து இந்த கரும்பு தான் காவல் தெய்வமாக இருக்கும் என்றும்
வியாபாரிகள் விவசாயிகள் யாரும் நஷ்டம் படக்கூடாது என கடவுளை வேண்டிக்கொண்டு முதல் மூன்று கரும்புகளை கடவுளுக்கு நேந்து விடுவதாக கூறினார்.
நேந்து விடப்படும் இந்த கரும்புகள் விற்பனைக்கு செல்வதில்லை விவசாயிகளின் வீட்டிற்கோ அல்லது கோவிலுக்கோ செல்வதாக கூறப்படுகிறது.