தென்மாவட்டங்களில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளில் கருப்பட்டி மிட்டாய். கருப்பட்டி, சர்க்கரை, சீனி என மூன்று விதமான பாகில் தயார் செய்யப்படும் இந்த மிட்டாயை சீனி மிட்டாய், சீரணி மிட்டாய், ஏணி மிட்டாய் என தென் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்
இதன் சுவை பற்றி சொல்லவே தேவையில்லை திருநெல்வேலி அல்வா, ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போல இந்த மிட்டாயக்கும் தனி இடம் தரலாம். முன்பு கடைக்கு போய் கருப்பட்டி மிட்டாய் வாங்கும் போது, அதை ஓலைக்கொட்டான் எனப்படும் பனையோலை பெட்டியில் போட்டு கட்டி தருவார்கள்
கால மாற்றத்தில் பனையோலை பொருட்களின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், கருப்பட்டி மிட்டாய் இப்போது பாலித்தீன் பைகளில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கூனான் கடையில் இன்றும் கருப்பட்டி மிட்டாயை பனையோலை பெட்டியில் போட்டு தான் கட்டி தருகின்றனர்
இது பற்றி பேசிய கடையின் உரிமையாளர் சீனிவாசன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக இன்றும் பனையோலை பெட்டியில் போட்டு தருவதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற முடிகிறது என்றும்
இதன் மூலம் இன்றும் பனையோலை தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்பதால் இதை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்
ஓலைக்கொட்டானில் கருப்பட்டி மிட்டாயை போட்டு வைக்கும் போது, அதற்கு தேவையான காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கிடைப்பதால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அது மட்டுமல்ல அதன் சுவையும் கூடுதலாக இருக்கும் என்பது சிறப்பு