பச்சை பசேரென்ற மலை தொடர்கள், அடர்ந்த காட்டுக்குள் பயணிப்பது போல உணர்வை கொடுக்கும் சாலைகள், மூலிகை மரங்களை உரசியபடி வரும் குற்றால அருவிகளில் தண்ணீர், அகஸ்தியர் கால் பதித்த திருத்தலம்..
தென்னகத்தின் மூலிகை குளியலறை என்றே சொல்லலாம். இது தான் தென்னகத்தின் ஸ்பா, ஸ்பா ஆப் சவுத் என்று அழைக்கப்படும் குற்றாலம். பேரருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலியருவி என குற்றாலத்தில் ஐந்து அருவிகள் உள்ளது
பேரருவியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஐந்து அருவி. ஐந்தருவி தண்ணீர் திரிகூட மலையில் இருந்து காடு வழியாக ஓடையாக மரங்களின் நிழல்களிலேயே பயணித்து வருவதால் இந்த தண்ணீர் இயற்கையாகவே குளுமையாக இருக்கும்
குற்றால சீசன் நேரங்களில் எவ்வளவு தான் வெயில் இருந்தாலும் ஐந்தருவிகள் குளிக்கும் பொழுது குளுமையான தண்ணீரை உணர முடியும். மேலும் இந்த ஐந்து அருவிக்கு செல்லும் சாலையில் தான் வெண்ணமடை படகு சவாரியும் அமைந்திருக்கிறது
ஐந்தருவியில் சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. குற்றால சீசன் ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் கலைக்கட்டி இருக்கும். ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலிருந்து தண்ணீரில் 3 கிளைகள் ஆண்கள் குளிக்கும் பகுதிக்காகவும், 2 கிளைகள் பெண்கள் குளிக்கும் பகுதியாகவும் இருக்கின்றன
மேலும் ஐந்து தலை நாகப்பாம்பைப் போல ஐந்து திசைகளிலும் அருவிகள் விழுவதால் இவை புனித பாம்பான ஆதிசேசனுடன் ஒப்பிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. குற்றாலம் என்றாலே இங்கு கிடைக்கும் சீசன் பழங்களும், சுட சுட பொறித்தெடுக்கும் சிப்ஸ் தான். ஸ்டார் ஃப்ரூட், துரியன், ரம்புட்டான் என சீசன் பழங்களுக்கு பஞ்சமே இல்லை
மேலும் குற்றாலத்தில் சுட சுட பொறிக்கப்படும் நேந்திரம் பழம் சிப்ஸ்களை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். உரித்த பழத்தை இயந்திரத்திற்குள் செலுத்திய நொடி பொழுதில் சுட சுட சிப்ஸாக பொரிந்து விடுகிறது