தஞ்சாவூர் அடுத்த திருவையாறு, திருப்பந்துருத்தி, வடுகக்குடி, மருவூர், நடுக்காவேரி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் நெல் சாகுபடியை விட வாழை சாகுபடியை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர்
இந்நிலையில் வாழைத் தோட்டத்தில் இலை, வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தார் ஆகிய சாகுபடி பருவம் முடிந்தவுடன் விவசாயிகள் வாழைத் தோட்டத்தை வாழைநார் உற்பத்தி செய்யக் கூலி தொழிலாளிகளிடம் குத்தகைக்கு விட்டு விடுகின்றனர்
இதனையடுத்து அப்பகுதியைச் சுமார் 1000 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வாழைநார் தயாரிக்கும் தொழிலில் ஆண் பெண் இருபாலருக்கும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் வாழை நார்கள் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது
பூ நார் தயாரிக்கும் தொழில் ஒரு ஆண்டில் ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் மற்ற மாதங்களில் வேலையின்றி இருப்பதாகவும் இதையை தொழிலாக நம்பி வாழும் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவ வேண்டும் என தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடவுள் சிலைகள், மனிதர்களை அலங்கரிப்பது மாலை. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது பூ நார் தான். "பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்" என்று கூறுவார்கள் ஆனால் இவற்றை தயாரிக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கை கசந்தபடியே தான் இருந்து வருகிறது
இருந்தாலும் என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையும் மாறும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் பூ நார் தயாரிக்கும் தொழிலாளிகள். இது குறித்து தொழிலாளிகள் கூறுகையில், “விடியற் காலையிலலாம் சீக்கிரமா எழுந்து வீட்டு வேலையை பாத்துட்டு 6 மணிக்கலாம் தோப்புக்கு வந்துருவோம்
மதியம் 2 மணிக்கு வேல முடிஞ்சுரும் எங்களுக்கு வேற தொழில்தெரியாது இது தான் எங்களோட குடும்ப தொழில் மாறி இருக்கு இப்போ, எங்களுக்கு ஒரே நாள் ஊதியம் வந்து பெண்களுக்கு ₹450-வும் ஆண்களுக்கு ₹600 ஊதியம் கிடைக்குது
தோப்புல எந்த நேரத்தில என்னா வரும்னு சொல்ல முடியாது உயிருக்கு உத்திரவாதம் இல்ல, நாங்க சுமார் 2000 குடும்பம் இந்த தொழில நம்பி தான் இருக்கோம்,அரசு எங்களுக்கு இன்ஸ்யூரன்ஸ்,வேலையில்லாத 3 மாதங்களுக்கு உதவி தொகை குடுத்தா சாப்புடுரதுக்காவது உதவும்” என்றனர்