இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் தனக்கான கடமைகளை செய்து முடிக்கவும், தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் இருந்தாலுமே எந்த அளவிற்கு தங்களது கடமைகளில் கவனம் செலுத்துகிறோமோ அதே அளவிற்கு நம்முடைய உடல் நலத்தின் மீதும் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
ஒருவர் எப்போதுமே தன்னுடைய உடல் நலனிற்கும் மனநலத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்காக இல்லாமல் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்வது, மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க முயற்சி செய்வது, உங்களை அமைதிப்படுத்தும் சூழ்நிலையில் இருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு இயற்கையோடு நேரம் செலவிடுவது, தியானம், நல்ல புத்தகங்களை படிப்பது ஆகியவை ஒட்டுமொத்தமாக மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
எப்போதும் நமக்கு மிகவும் பிடித்தவர்களோடும் அன்பானவர்களோடும் இருக்கும் போது மன அழுத்தம் இருந்தாலும் கூட அவை மிக எளிதில் குறைந்து விடும். முடிந்த அளவு உங்களுக்கு பிடித்தவரோடும், யாரோடு இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, யார் உங்களை ஊக்கப்படுத்தியும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்களோ அவர்களோடு இருக்க முயற்சி செய்யுங்கள். இது மன அழுத்தத்தை குறைத்து இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மெதுவாக குறைக்கும்.
இணையத்தில் மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்பதை விவரிக்கும் பல்வேறுவித வழிமுறைகள் கொட்டி கிடைக்கின்றன. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தசைகளை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது, யோகாசனம் செய்வது, நடைப்பயிற்சி ஆகியவை பொதுவாக மன அழுத்தத்தை குறைக்கவும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பின்பற்றப்படும் வழிமுறைகள் ஆகும்
தூக்கம் என்பது ஒருவரின் மனதிற்கும் உடலுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூங்குவதற்கு சரியான நேர மேலாண்மையை பின்பற்றுவது, தூங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்வது, தூங்குவதற்கு முன் மொபைல் மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவை ஆரோக்கிய உறக்கத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் தினசரி ஆரோக்கியமான உறக்கத்தை மேற்கொள்ளும் போது மன அழுத்தம் குறைவது மட்டுமல்லாமல் அவரது இதயத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் ஒருவர் தப்பிக்க வேண்டுமெனில், முடிந்த அளவு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் தனது வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது, காய்கறிகள், தானியங்கள், குறைந்த அளவு உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, நடனம் ஆகியவையும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. லேசான அளவில் உடற்பயிற்சி செய்யும் போது செய்வதினால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்
இவை அனைத்தையும் தாண்டி உங்களால் மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை என்ற உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.