தஞ்சாவூர் வல்லம் பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வஜ்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான பிரமாண்ட குளம் ஒன்று அதன் அருகிலேயே அமைந்துள்ளது. இக்குளமானது சுவரன் மாறன் கோட்டை என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது
மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்குளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை குளம் முழுவதும் நீர் நிரம்பி பசுமையுடன் காட்சியளித்தது. பல நூற்றாண்டுகளாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி வல்லம் பகுதி மக்களும் இக்குளத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்
பல வரலாற்று சிறப்புகள் ஒளிந்திருக்கும் இக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் குளம் முழுவதும் கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்து குளம் இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியது. வல்லம் பகுதி மக்கள் இக்குளத்தை மீட்டெடுத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
ஆனால் அரசால் இக்குளத்தை மீட்டெடுக்க எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் தஞ்சையை சேர்ந்த வில்சன் பிரபு, சேதுபதி, ஹரிகரன் ஆகிய மூன்று இளைஞர்களும் தன்னார்வலர்களாக முன்வந்து பார்ப்பதற்கே திகில் ஊட்டும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள இக்குளம் முழுவதும் நிறைந்துள்ள, கருவேலை மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
குளத்தை மீட்டெடுக்கும் பணியினை அவ்வபோது யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்ககங்களிலும் பதிவிட்டு 21 வாரங்களாக குளத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 70% பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த செயலை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பாராட்டி ஊக்குவித்தும் வருகின்றனர்
இந்த நிலையில்தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து இந்த இளைஞர்களுக்கு உறுதுணையாக ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் குளத்தை மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து 20 வாரங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர்
இக்குளத்தில் கருவேலை மரங்களோடு மது குடித்துவிட்டு இங்கேயே பலர் உடைத்த பாட்டில்களும் ஆபத்தான நிலையில் உள்ளன. பல இடர்பாடுகளையும் பொருட்படுத்தாமல் எப்படியாவது இந்த குளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து இளைஞர்கள் பணியினை செய்து வருகின்றனர்
குலத்தை சீரமைக்கும் பணியில் இன்னும் 30% வேலை தான் உள்ளது. மீதமுள்ள பணியினை ஓரிரு வாரங்களில் முடித்து விடுவோம் அதன் பிறகு இக் குளத்திற்கு நீர் நிரம்ப மழையை எதிர்பார்த்து வருகிறோம் என்று இளைஞர்கள் கூறுகின்றனர்