திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளம் கிராமத்தில் பழைய ராமேஸ்வரம் என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது
இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது
இது குறித்து கோவில் அர்ச்சகர் வெங்கடேஷ் ஐயர் கூறுகையில், “தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அறுகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது
ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ராமர், அவருக்கு மோட்சம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தாமிரபரணி நதிக்கரையில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்
அந்த லிங்கம் தான் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்க சுவாமி ஆகும். இந்த ஆலயத்தில் ராமலிங்க சுவாமி மூலவராக உள்ளார்
வெளி மணி மண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி சன்னதிகளும் உள்ளன
மூலவருக்கு வடக்கு பகுதியில் தனிக் கோயிலாக ஜடாயுவுக்குப் பிண்டம் போட்ட ‘பிண்ட ராமர்’ உள்ளார்
ஆலயத்தின் அருகில் எட்டெழுத்து பெருமாள் கோவிலும், கோசாலையும் அமைந்திருக்கின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ராமலிங்க சுவாமிக்கும், ராமருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது
அருகன்குளம் கிராமத்தில் உள்ள இக்கோவில் ராமேஸ்வரம் கோவிலுக்கும் முந்தைய கோவில் என்பதால் பழைய ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஏராளமானவர்கள் இங்கு வந்து ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இத்தல இறைவனையும் வழிபடுகிறார்கள்
இந்த கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெய்யும், நல்லெண்ணெய்யும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும்” எனத் தெரிவித்தார்