கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களுள் ஒன்று கோவை குற்றாலம். கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரக அடர் வனத்தில் இந்த சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது
வனத்துறையினர் பராமரிப்பில் செயல்பட்டு வரும் இந்த இடத்திற்கு கோவை மட்டுமன்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பணிகளும் தினமும் வந்து செல்கின்றனர்
வார இறுதி நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி வரும் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்
இந்த குற்றால அருவியின் அடிவாரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தான் அருவியை அடைய வேண்டும்
அவ்வாறு பொதுமக்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் கடந்த 2007ம் ஆண்டு 150 மீட்டர் நீளத்துக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது
தேக்கு மரங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வந்தது. இந்த தொங்கு பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் ஆண்டுகள் செல்லச் செல்ல தொங்குபாலத்தில் இருந்த மரப்பலகைகள், பிடிமான கம்பிகள் சேதமடைந்தன
இதனால் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தொங்கு பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்பாடில்லாமல், பரிதாபமாக காட்சியளிக்கிறது
இதனிடையே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொங்கு பாலத்தை வனத்துறையினர் புனரமைக்க உள்ளதாக அறிவித்தனர். ஆனால் அது இன்றளவும் அறிவிப்பாக மட்டுமே இருந்து வருகிறது
இந்த சூழலில் கோவை குற்றால சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும் தொங்கு பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்