விருதுநகர் குல்லூர்சந்தை கிராமத்தில் கடந்த 1986 ம் ஆண்டு விவசாய பயன்பாட்டுக்கு கவுசிகா நதியின் குறுக்கே அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் அணை ஒன்று கட்டப்பட்டது.
மொத்தமாக 9 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் இரண்டு மதகுகள் மூலம் விவசாயத்திற்கு நீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த அணையால் சுற்றியுள்ள கிராமங்களான சூலக்கரை, செந்நெல்குடி, மெட்டுக்குண்டு போன்ற 7 கிராமங்களை சேர்ந்த 2891 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
ஆனால் இன்றோ அணையின் நிலை கவலையளிக்கும் படி உள்ளது. ஒரு பக்கம் விருதுநகர் நகராட்சி கழிவுகள் கவுசிகா நதியினை மாசு படுத்திவிட்ட நிலையில்,
மற்றொரு பக்கம் அணைப்பகுதியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களும், ஆகாய தாமரைகளும் நீர்வளத்தை பாதிக்கின்றன.
விருதுநகரின் சிறந்த ஒரு சுற்றுலா தளமாக இருந்திருக்க வேண்டிய இடம் இன்று கலையிழந்து காணப்படுவதற்கு போதிய பராமரிப்பு இல்லாததே என்று கூறப்படுகிறது.
அணை கட்டப்பட்ட காலத்தில் சுற்றுலா வசதிக்காக சிறுவர் பூங்கா ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டது.
அணை பராமரிப்பு இல்லாமல் இருந்த காலத்தில் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்களும் ஒன்றன் பின் ஒன்றாக காணாமல் போய்விட்டன.
இப்போதும் காலை மற்றும் மாலை நேரங்களில் ரம்மியமாக காட்சி தரும் இந்த குல்லூர்சந்தை அணை,
ஒரு சிறந்த சுற்றுலா தளங்களுக்கு உரிய அனைத்து தகுதிகளும் இருந்தும் எப்போது முழுமையான சுற்றுலா தளமாக மாறும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறது.