தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் தீயணைப்பு துறையினர் அங்கு மாணவர்களுக்கு தீ தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி காண்பித்து வருகின்றனர்
அந்த வகையில் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தீ தடுப்பு குறித்த செயல்முறை விளக்கத்தை மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்ததோடு, மாணவர்களையும் ஒத்திகையில் ஈடுபடுத்தினர்
துணி வகைகள், எண்ணெய் வகைகளில் தீப்பிடித்தால் அணைக்கும் முறை, தீ தடுப்பானை உபயோகிக்கும் முறை மற்றும் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் விளக்கம் அளித்தனர்
மேலும், விபத்தில் சிக்கியவரை மீட்பது எப்படி என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்