அதிக சத்து கொண்ட கிழங்குகளில் முதன்மையானது சேனை கிழங்கு. மண்ணில் விளையக்கூடிய கிழங்குகளில் அளவில் பெரியது சேனை கிழங்கு
சேனை வளர பத்து மாதங்கள் வரை ஆகின்றது. எட்டாம் மாதம் முதல் அறுவடை தொடங்குகிறது. பெரும்பாலும் பொங்கல் பண்டிகை காலங்களில் தான் அறுவடை செய்யப்படுகிறது
அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கரில் சேனை கிழங்கு சாகுபடி செய்து வரும் விவசாயி சரவணன் சேனை கிழங்கு சாகுபடி குறித்து விளக்குகிறார்
இது குறித்து விவசாயி கூறுகையில், “சேனை கிழங்கு நடவு செய்யும் நிலத்தில் மண்ணை தயார்படுத்த இலை தழைகள் மற்றும் தொழு உரங்களை பயன்படுத்தி அதற்கு பிறகு கிழங்கு நட வேண்டும். ஏக்கருக்கு கிட்ட தட்ட 1,800 கிலோ விதை கிழங்கு தேவை
ஒரு கிழங்கை நான்கு அல்லது ஐந்து பகுதிகளாக வெட்டி பின் நடப்படுகிறது. ஒரு விதை கிழங்கு சுமார் 1/4 கிலோ (அ) 1/2 கிலோவிற்கு குறைவாக இருக்க வேண்டும். 2 அடி நீளம் 2 அடி அகலத்திற்கு ஒரு விதை கிழங்கு நடப்பட வேண்டும்
சேனையில் பூச்சி தாக்குதல் சற்று குறைவே இருக்கும். அதற்கு கற்பூரகரைசல் தெளித்தால் பூச்சி தாக்குதல் இருக்காது
சேனை கிழங்கிற்கு ஈரப்பதம் அவசியமானது, அதிகமான தண்ணீரால் தண்டு அழுகும் நிலை ஏற்படும் அபாயமும் உண்டு
எனவே அவற்றை சரியான அளவில் வைக்க வேண்டும். இதற்கு ஊடு பயிராக வெங்காயத்தை விளைவிக்கலாம். ஏக்கருக்கு இருபது டன்கள் அதிகபட்ச மகசூல் கிடைக்கும்
ஒரு கிழங்கு மூன்று கிலோ வரை வளரும். சேனை கிழங்குகள் பெரும்பாலும் கேரளா போன்ற மாநிலங்களிலே அதிகம் விரும்பப்படுவதால் கேரளாவிற்கே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது\“என்று தெரிவித்தார்